Saturday, January 23, 2021

பாவாத் பாவம் : 2ம் பாவம்

பாவாத் பாவம் :  2ம் பாவம் 

 இரண்டுக்கு உரிய சுக்கிரன் மறு இரண்டில் இருக்கிறார். அதாவது மிதுனத்தில். பெரும்பாலும் அவருடன் சூரியனும் புதனும் சேர்ந்தே இருப்பார்கள். சூரியன் பகை. புதன் நண்பர். சூரியனுடன் அஸ்தாங்கதம் ஏற்பட்டால் சுக்கிரன் பலம் இழந்து விடுவார். புதனும் அப்படியே. பலக்குறைவால் மாரகம் குறையும். உண்மை தான். ஆனால் மற்ற காரகத்துவங்களும், ஆதிபத்தியங்களும் வீணாகிவிடும். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. காரகத்துவம் என்பது ஒரு மனிதனின் கண், காது, மூக்கு,  வாய் போன்ற அவயவங்கள். இவைகள் மாறாதவை. ஆதிபத்தியம் என்பது சட்டை, வேட்டி, கண்ணாடி, தொப்பி போன்றவை ஆகும். லக்னத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். சுக்கிரனும், புதனும் அஸ்தாங்கதம் அடையாமல் இருந்து 9 ஐப் பார்க்க, அது தனுசு. பாக்கிய ஸ்தானம். 

மூன்று என்பது கால் மறைவு ஸ்தானம். நல்லதும், கெட்டதும் தரும் இடம். திடம், வீரம், பராக்கிரமம், தைரியம்,  இளைய சகோதரம், சகாயம் என்று இன்னும் எவ்வளவோ! மூன்றில் புதன் ஆட்சி. அவர் 6க்கும் உரியவர். ஆதி பத்திய விஷேசம் இல்லாதவர். 6க்குக் கேந்திரத்தில் இருக்கிறார். சுக்கிரன் தன, களத்திராதிபதி, பாவாத் பாவம். ஒரு கேந்திரத்திற்கு உரியவராகி பாதி கேந்திராதிபத்ய தோஷமும் உள்ளவராவார்.சூரியன் பஞ்சமாதிபதி, கோணாதிபதி, பூர்வ புண்யாதிபதி,  யோக கிரகம். சம ஸ்தானத்தில் இருந்து நட்பைப் பார்க்கிறார். யோகம் பேசும். 

குரு தனுசில் இருப்பதாகக் கொள்வோம். குரு பாக்கியத்தில் ஆட்சி,  மூலத் திரிகோணம். அவர் இருப்பை விட பார்வைக்கே வலிவு அதிகம். பலம் உள்ள பார்வை. சூரிய, சுக்கிர, புதன் சுபத்வம் அடைவார்கள். காரகத்துவங்களும் ஆதிபத்தியங்களும் கூடச் சிறக்கும். குரு விரயாதி பதியும்  கூட. பலம்  அடைந்ததால் விரயம் கட்டுக்குள் இருக்கும். 

தற்போது செவ்வாயும் தனுசில் இருப்பதாகக் கொள்வோம். எடுத்த எடுப்பில் குரு மங்கள யோகம். மித்திரர்கள். இரு கோணாதிபதிகள் சேர்க்கை. செவ்வாய்  கேந்திர கோணாதிபதி. பாக்கியாதிபதியை  விடப் பலன் அதிகம் தருபவர். யார் லக்னாதிபதியோ அவர் ஒரு முதல்  கோணத்திற்கும் முதல் கேந்திரத்திற்கும் உரியவர் ஆவார். இது ஒரு சிறப்பு. எந்தவொரு கிரகம் ஒரு கோணத்திற்கும் ஒரு கேந்திரத்துக்கும் உரியதாக வருகிறதோ அந்த கிரகம் ராஜ யோகம் செய்யும். செவ்வாயும், குருவும் ராஜ கிரகங்கள். மற்றும் ஒரு ராஜ கிரகமான சூரியனைப் பார்க்கிறார்கள். ராஜ கிரக சம்பந்தம். மற்றும் சுக்ரனையும், புதனையும் பார்ப்பார்கள். சுக்கிரனுக்கும், புதனுக்கும் இன்னும் சுப பலன்கள் கூடும். 

இப்போது சந்திரனும் தனுசில் இருப்பதாகக் கொள்வோம். உடனே கஜ கேசரி யோகம், குரு சந்திர யோகம், மற்றும் சந்திர மங்கள யோகம் அல்லது சசி மங்கள யோகம் ஏற்படும். சந்திரன் ஒற்றை வீட்டுக்காரர். ஆகவே கேந்திராதிபத்திய தோஷமும் குறைவு. இங்கு மூன்று பேருமே மித்திர்கள். ஒவ்வொருவராலும் மற்றவருக்கும் பலம். இடமும் முறையே ஆட்சி, நட்பு, சமம் என்ற அளவில் இருக்கிறது.  செவ்வாய் இங்கே உச்சாரோகணம் மற்றும் உச்சாபிலாஷா. மூலத்தில் இருப்பது சிறப்பு. ஏனெனில் கேது செவ்வாயைப்போலப் பலன்.

சந்திரன் பூராடத்தில் இருந்தாலும் சிறப்பே. சுக்கிரனும் சந்திரனும் பெண் கிரகங்கள். மேலும் அவர்கள் திக் பலம் அடையும் இடமும் 4. இது ஒரு ஒற்றுமை. குரு உத்திராடத்தில் இருந்தால் அது மித்ர சாரம். மிதுனத்தில் சூரியன் புனர்பூசத்தில் இருந்தால் அதுவும் மித்ர சாரம் தான். அது நட்சத்திரப் (சார) பரிவர்த்தனை. ஸ்தானப்பரிவர்த்தனையை விட நட்சத்திரப் பரிவர்த்தனை பலம் கூட. பலனும் அதிகம்.

 சுக்கிரன், செவ்வாய் சாரத்தில் இருப்பதும், புதன், ராகு சாரத்தில் இருப்பதும் பரவாயில்லை. சுக்கிரன் தன் ஸ்தானங்களுக்கு 2, 9 ல் இருப்பதும், புதன் தன் ஸ்தானங்களுக்குக் கேந்திரங்களில் இருப்பதும், சூரியன் தன் ஸ்தானத்திற்கு 11 ல் இருப்பதும் நல்லது தான். ஆனால் சந்திரன் மட்டும் தன் ஸ்தானத்திற்கு 6 ல் இருக்கிறார். அதுவும் பாக்கியத்தில், மித்ரர்களுடன். பெரிய குறை ஒன்றும் இல்லை. 

தற்போது சனி எங்கிருந்தால் நல்லது என்று பார்ப்போம். சனி துலாத்தில் உச்சம். பலன் பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால் 3ம் பார்வையால், பாக்கியத்தையும், 7ம் பார்வையால் மேஷத்தையும், 10ம் பார்வையால், கடகத்தையும் பார்ப்பார். மேஷமும், கடகமும் வீணாகி விடும். 3 ம் பார்வையால் செவ்வாயும், சந்திரனும் வீணாகி விடுவார்கள். சனியை இடம் மாற்றி கும்பத்தில் வைத்தால் அது ஆட்சி மற்றும் மூலத் திரிகோண ஸ்தானம். ஆயினும்  பாதக ஸ்தானம். மேஷ, சிம்ம, விருச்சிகம்  கெட்டு விடும். கடும் பகை. சிறிது மாற்றி மகரத்தில் வைத்தால் கடகம் சிறிது   பாதிப்புடனும், மீன, துலாம் பாதிப்பு இல்லாமலும் தப்பித்துக் கொள்ளும். 

இப்போது ராகு, கேது எங்கே இருந்தால் நலம் என்று யோசித்தால் அவர்களுக்கு உகந்த இடம் உச்சம் தான். ராகு ரிஷபத்திலும், கேது விருச்சிகத்திலும் இருப்பதே சிறப்பு. 

நாம் எடுத்துக் கொண்ட விஷயம் மேஷ லக்னத்திற்கு இரண்டுக்குரிய சுக்கிரன் மறு இரண்டில் பாவாத்பாவம். இப்போது கிரகங்களை ஆராயலாம். 3 ல் மிதுனத்தில் ஒரு கோணாதிபதி, ஒரு கேந்திராதிபதி, ஒரு பணபராதிபதி, ஒரு ஆபோக்லீபாதிபதி இருக்கிறார்கள். அது போல 9ல், தனுசிலும் ஒரு கோணாதிபதி, இரு கேந்திராதிபதி, ஒரு பணபராதிபதி, ஒரு ஆபோக்லீபாதிபதிகளும் இருக்கிறார்கள். இங்கேயும் மூன்று சுபர்கள். 3 லும் இரு சுபர்கள். இங்கே இரு ராஜ கிரகங்கள். 3 லும் ஒரு ராஜ கிரகம். இப்போது பார்வையைப் பார்க்கலாம். 3 ல் இருப்பவர்கள் 9 ஐப் பார்ப்பதும், 9 ல் இருப்பவர்கள் 3 ஐப் பார்ப்பதும் சம சப்தமம். பரஸ்பரம் பகைப் பார்வையாயினும், அது சுபர் பார்வை. குரு கூடுதலாக மேஷத்தையும், சிம்மத்தையும் பார்ப்பார். நல்லது தான். செவ்வாய் கூடுதலாக மீனத்தையும், கடகத்தையும் பார்ப்பார். மீனம் விரயம், கடகம் நீசம். இரு வீட்டாரும் தன்னுடன் சுபத்துவத்தில். ஒன்றும் மோசம் இல்லை. 

சனியார் மீனத்தையும் கடகத்தையும் ஒரு சேரப்பார்ப்பார். மீனத்தை விடவும் கடகத்துக்குத் தொல்லை அதிகம். பத்தில் ஆட்சியானாலும் அவர் பாதகாதிபதியும்  தான். துலாம் உச்ச வீடு. தொல்லை ஒன்றும் இல்லை. உச்ச ராகு கேதுவுக்குப் பார்வை ஒன்றும் வெளியில் இல்லை. அவர்களை யாரும் பார்க்கவும் இல்லை. ராகு, கேதுக்களுக்குச் சாரம் என்று பார்த்தால் ராகுவுக்கு சூரிய சாரம் ஆபத்தே. ராகு, சந்திர சாரத்தில் இருந்தால் கேது சனி சாரத்தில் இருப்பார். இதுவும் மகா ஆபத்தே!  செவ்வாய் சாரம் என்று பார்த்தால் விருச்சிகத்தில் கேது, புத சாரம் ஏறுவார். அதுவே உசிதம். 

ஆகவே எனக்கு  இது ஒரு அபூர்வமான அமைப்பாகத் தோன்றுகிறது. இது எப்போது வரும் என்று பின்னோக்கி 60 வருடங்களும் முன்னோக்கி 30 வருடங்களும் சென்று பார்த்ததில் இந்த அமைப்பு வரவில்லை. ஆனால் என்றோ ஒரு நாள் வந்தே தீரும். அப்படி வந்தால் பல ஆச்சரியங்கள் நிகழும். இந்த அமைப்புக்குச் சமமாகவோ,  கூடுதலாகவோ வேறு ஒன்று இருப்பதும் துர்லபம் தான். இந்த அமைப்பு சிறக்க வேண்டும் என்றால் கிரகங்கள் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குக் கூடிய வரை  உட்பட வேண்டும். 

அஸ்தாங்கதம், அதிசாரம், வக்ரம், ஸ்தம்பனம், வேதை மற்றும் கிரக யுத்தம் இவைகளால் பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும். பேதம், உல்லேகம், அம்சுமர்த்தனம், அபசவ்யம் மற்றும் யுத்தம் என்று ஐந்து விதமாகக் கிரக யுத்தம் இருக்கும். அதை விரிவாகப் பின்னர் சொல்வேன். இவைகளையெல்லாம் தாண்டித் தான் இந்த அமைப்பு பலன் தர வேண்டும். தரும் என்று நம்புவோம். இந்த அமைப்பு அதிக பட்சமாக இரண்டரை நாள் அமுலில் இருக்கும். சந்திரன் ஒரு ராசியில் இருக்கும் கால அளவு அது. அவர் மாறிவிட்டால் இந்த அமைப்பு  சிதைவுறும். 

அப்போது நாளுக்கு இரண்டு மணி நேரமாக வரும் மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் அனைவரும். பாக்கியவான்கள். அவர்களிலும் பூர்வ புண்ணியம் மிக்கவர்கள் மஹா பாக்கியவான்கள். அவர்களிலும் அதீத புண்ணியம் உள்ளோர் மகான்கள். அந்த மகான்களிலும் தெய்வ அனுக்கிரகத்தால் மேன்மையுற்றவர் உத்தம மஹான். அவரால் இந்த உலகம் உய்யும். பூவுலகம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும். புத்துயிரும் பெறும். அது எப்போதோ! 

ஆனால் இப்போதோ மற்ற பத்து பாவாத்பாவங்கள் காத்திருக்கின்றன. மேலும் மேஷ லக்னத்திற்கு இந்த அபூர்வமான அமைப்பின் விளைவுகளை அறிந்த போது மற்ற பாவங்களுக்கும் அறிய மனம் விழைகிறது. ஆனால் ஒரு உத்தமத்தைப் பார்த்ததால் ஒரு அதமத்தையும் பார்க்கலாம் என்று மனதிலும் தோன்றுகிறது. அது பெரிய விஷயமே இல்லை. 2019 டிசம்பர் மாதத்தில் கிரகங்களின் சேர்க்கை மற்றும்  பார்வைகளைக் கவனத்தில் கொண்டு ஆராய்ந்தால் ஏன் கொரோனா என்று தெரியவரும். அதை விடவா உலகத்துக்குப் பின்னடைவு? அடுத்து அது தான். ஜோதிடம் எனும் ஆழ் கடலின் கரையில் நின்று நான் அதிசயித்துக் கொண்டு இருந்தபோது ஆழ் கடல் தன் அபூர்வ முத்துக்களை என் முன்னே அள்ளிக் குவித்திருந்தது.

 அனைத்தும் ஓர்ந்து உணர்க !
 அன்புடன் அளித்தவர்: சக்திஸ்ரீ. BE ; M.A ; (ASTRO).

No comments:

Post a Comment

ஒன்பது கிரக சம்பந்தமும், கிரக அஸ்தாங்கதமும், கிரக யுத்தமும், கொரோனாவும்.

  2019 - மார்ச்7-5 மணி 52 நிமிடம். சனி தனுசில் இருந்தபோது ‌‍‍‍‍‍ ‌கேதுப் பிரவேசம்.‌ தனுசில் இரு கிரகங்கள். சனி கேதுவின் பிடியில் வந்தார்.  ...